×

தமிழ்நாட்டில் மஞ்சள் அலர்ட் மே 2ம் தேதி வரை வெயில் அதிகரிக்கும்

சென்னை: தமிழ்நாட்டில் இயல்பைவிட 3 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ்க்கும் அதிமாக வெப்பம் நிலை அதிகரிக்கும் என்பதால் மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. அத்துடன் மே 2ம் தேதி வரை வெயில் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் தொடர்ந்து நீடித்து வரும் வறண்ட வானிலை மற்றும் வெப்ப நிலை காரணமாக பெரும்பாலான இடங்களில் 108 டிகிரி வெயில் கொளுத்தி வருவதுடன், வெப்பநிலை அதை விட அதிமாக உணரப்படுகிறது.

அதாவது 110 டிகிரி வெயில் இருந்தால் எப்படி வெப்பம் தகிக்குமோ அந்த அளவுக்கு வெப்ப நிலை உள்ளது. பகலில் பொதுமக்கள் வெளியில் வர முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் கடுமை காட்டி வருகிறது. வயதானவர்கள், குழந்தைகள் வெளியில் வரவேண்டாம் என்று சுகாதாரத்துறை அறிவுரைகளை வழங்கி வருகிறது. பொதுமக்களுக்கு ஓஆர்எஸ்எல் பவுடர் வழங்கவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது. வெப்பத்தை தணித்துக் கொள்ள சிலர் குடும்பங்களுடன் மலைப் பகுதிகளுக்கு சுற்றுலா செல்கின்றனர்.

பெரும்பாலானவர்கள் வீடுகளில் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது ஏப்ரல் மாதம் முடிந்து மே தொடங்க உள்ள நிலையில் ஏப்ரல் மாதத்தில் எப்போதும் இல்லாத வகையில் 109 டிகிரி வரை வெயில் கொளுத்தியுள்ளது வானிலை ஆய்வாளர்களை சிந்திக்க வைத்துள்ளது. மேலும் பசிபிக் பெருங்கடல் பகுதியில் நிலவும் எல்-நினோ பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த சில மாதங்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பம் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு லேசான மழை பெய்தாலும், வட தமிழகத்தில் பெரும்பாலும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் நேற்று 108 டிகிரி வெயில் கொளுத்தியது. தர்மபுரி, வேலூர், திருத்தணி, திருப்பத்தூர் 106 டிகிரி, கரூர் பரமத்தி, மதுரை 102 டிகிரி, சென்னை, கோவை, நாமக்கல், திருச்சி 101 டிகிரி, தஞ்சாவூர், பாளையங்கோட்டை உள்பட 15 மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி வெயில் நிலவியது.

இந்நிலையில், ஒடிசா, ராயலசீமா பகுதிகளில் நேற்று 109 டிகிரி முதல் 113 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. மேலும் மத்திய ஆந்திரா, தெலங்கானா, ஜார்கண்ட், சட்டீஸ்கர், உத்தரபிரதேசம் மாநிலங்களில் 106 டிகிரி முதல் 109 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. மேற்கண்ட மாவட்டங்களில் நேற்று இயல்பைவிட 4 டிகிரி முதல் 6 டிகிரி செல்சியசுக்கும் அதிமாக வெப்பநிலை எகிறியதால் வெயில் வாட்டி எடுத்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கம் மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. பீகார், ஜார்கண்ட், அசாம் மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தென்னிந்திய பகுதிகளில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5.1 டிகிரி செல்சியசுக்கும் அதிமாக வெப்ப நிலை உயரும் என்றும், தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா பகுதிகளில் இயல்பைவிட 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியசும், சில இடங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி வரை உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

அதனால் இன்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஜார்கண்ட் மாநிலங்களில் 28ம் தேதி முதல் மே 2ம் தேதி வரை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் முதல் 6 டிகிரி செல்சியசுக்கும் அதிமாக வெப்பநிலை உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதனால் மே 2ம் தேதி வரை தமிழ்நாட்டிலும் வெயில் மற்றும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் சில இடங்களில் வெப்ப சலனம் ஏற்பட்டு லேசான மழை பெய்தாலும், வடதமிழகத்தில் பெரும்பாலும் வெயில் வாட்டி வதைக்கிறது.

* ஈரோட்டில் நேற்று 108 டிகிரி வெயில் கொளுத்தியது. சென்னை, கோவை, நாமக்கல், திருச்சி உள்பட 15 மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி வெயில் நிலவியது.

* ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கம் மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

* பீகார், ஜார்க்கண்ட், அசாம் மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

* ஊட்டியில் நேற்று இதுவரை இல்லாத அளவாக அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியல் பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 5.4 டிகிரி செல்சியஸ் அதிகம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் மஞ்சள் அலர்ட் மே 2ம் தேதி வரை வெயில் அதிகரிக்கும் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Indian Meteorological Department ,
× RELATED தமிழ்நாட்டில் கடல் சீற்றம் இன்றும்...